நடிப்பு: ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ராஜேந்திரன், சுப்பு பஞ்சு. விஜயலட்சுமி.
இயக்கம்: ராஜேஷ்.எம் தயாரிப்பு: கே.எஸ்.ஸ்ரீனிவாசன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா ஒளிப்பதிவு: ஷக்தி சரவணன்.
ஏகப்பட்ட அரியர்ஸ் வைத்திருக்கும் அறிவாளி ஆர்யா. உலகத்திலேயே அவருக்கு பிடிக்காத ஒரே விஷயம் படிப்பு. படிப்பும் ஏறாமல், வேலையும் செய்யாமல் சுற்றித் திரியும் ஆர்யாவுக்கு வீட்டில் எப்போதும் அர்ச்சனை. அம்மா மட்டும் அன்பு. அண்ணன் சுப்பு வெட்னரி டாக்டர். அரியர்ஸ் தேர்வு எழுதப்போகும் இடத்தில் கெஸ்ட் புரபசர் நயன்தாராவை சந்தித்து அவரை ஒருதலையாக காதலிக்கிறார். தான் காதலிக்கும் நயன்தாராவின் அக்காவே அண்ணனின் மனைவியாக வந்துசேர, நேரடியாகவே அண்ணியிடம் பெண் கேட்கிறார். வேலைவெட்டியில்லாத உனக்கு எப்படி என் தங்கையைத் தர முடியும் என்று அண்ணி கேட்க, ரோசப்பட்டு வீட்டை விட்டு வெளியேறும் ஆர்யா, எப்படி பணம் சம்பாதித்து, பெரிய ஆளாகி நயன்தாராவை கைப்பிடிக்கிறார் என்பதை காமெடியாக சொல்கிறது படம்.இந்த பாணியில் வெளிவரும் ஆயிரத்து ஒண்ணாவது கதைதான் என்றாலும் அதை சொல்லியிருக்கும் விதம் ஆயிரத்தில் ஒன்றாக இருப்பதால் பாஸ்கரன் பாசாகிறான். ஆர்யா ரொம்பவே யூத்தாக இருக்கிறார். பாக்கெட் நிறைய பிட் வைத்துக் கொண்டு பரீட்சை எழுத கிளம்புவதிலிருந்து தான் ஆரம்பிக்கும் டுட்டோரியலுக்கு ஷகீலாவை டீச்சராக கொண்டு வருவது வரை ஆர்யா அமர்க்களப்படுத்துகிறார். நயன்தாராவுடனான ரொமான்டிக்கில் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எல்லாம் ஒர்க் அவுட்டாகிறது. படத்தை தூக்கி நிறுத்தும் இன்னொரு ஹீரோ சந்தானம். ‘கிரி’ படத்தில் வடிவேலுக்கு பேக்கரி கிடைத்த மாதிரி சந்தானத்துக்கு சலூன் கிடைத்த பிளாஷ் பேக்கிலிருந்து ஆர்யாவின் வலது கரமாக இருந்து அவர் படும் அவஸ்தை ஒவ்வொன்றும் காமெடி பெக்.
வேலையில்லாத ஆர்யாவை அவமானப்படுத்தி அனுப்பும் நயன்தாராவின் அப்பா சித்ரா லட்சுமணனை அவருக்கு நடக்கும் பாராட்டு விழாவில் புகுந்து, புல் மப்பில் சந்தானம் பண்ணும் கலாட்டா தியேட்டரை அதிர வைக்கிறது. நயன்தாரா எப்போதும் போல அழகுதாரா. ஆர்யாவை பணம் சம்பாதிக்க தூண்டும் போது அவர் அதை மதிக்காமல் பேசும்போது துடிப்பதும், காதலை மனசுக்குள் மறைத்து கண்டிப்பை வெளியில் காட்டும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். இவர்களுக்கு அடுத்து கவனிக்க வைக்கிறவர்கள், சுப்பு பஞ்சு&விஜயலட்சுமி ஜோடி. இளையராஜாவின் 80&களின் பின்னணி இசையில் இவர்கள் காதல் வளர்ப்பதும், இவர்கள் முதலிரவு ஆர்யாவால் தடைபடுவதும் அப்போது இருவர் காட்டும் இருவித உணர்வுகளும் யதார்த்தமான அழகு. யுவனின் இசையும், ஷக்தி சரவணனின் ஒளிப்பதிவும் காதுக்கும் கண்ணுக்கும் இனிமையாக இருக்கிறது. டுட்டோரியல் கல்லூரி கலாட்டாக்களில் யதார்த்தம் இல்லை. ஆனாலும் பார்வையற்ற ஆசிரியையும் அவர் தொடர்பான காட்சிகளும் நெகிழ வைக்கிறது. ஒரு வங்கி அதிகாரியின் பாராட்டு விழாவில் ஒருவர் குடித்துவிட்டு வம்பு செய்வதை வேடிக்கை பார்ப்பது, எந்தவித அழுத்தமான காரணமும் இல்லாமல் நயன்தாராவுக்கு ஆர்யா மீது காதல் வருவது, ‘நான் கடவுள்‘ ராஜேந்திரனின் வில்லத்தனம் ஆகியவை காமெடி படத்தில் கண்டுகொள்ள தேவையில்லாத குறைகள்.கொஞ்சம் ரொமான்டிக், நிறைய காமெடி மூலம் இருக்கையில் அமர வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.எம்.
click here for orginal
bass enkira baskaran
